சுற்றுலா பயணிகள்-பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இடையே வாக்குவாதம்
காருக்கு பெட்ரோல் போட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி சுற்றுலா பயணிகள்-பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை,
காருக்கு பெட்ரோல் போட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி சுற்றுலா பயணிகள்-பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் அளவில் முறைகேடு
மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு நேற்று மதியம் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர் என்பது தனது குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தார். அப்போது தனது காரில் பெட்ரோல் குறைவாக 5 லிட்டர் அளவு மட்டுமே இருந்ததால் காரை நிறுத்தி அந்த பெட்ரோல் பங்கில் 45 லிட்டர் பெட்ரோல் போட கூறி அதற்கான பணத்தையும் பங்க் ஊழியர்களிடம் கொடுத்து விட்டு சிறிது தூரம் காரில் சென்றார். அப்போது காரில் உள்ள மீட்டரில் பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதாக காட்டியது.
இதையடுத்து காரை நிறுத்திய சுந்தர் காரின் மொத்த அளவு 50 லிட்டர் அளவிற்கு பெட்ரோல் போட்டும் குறைவாக காட்டுதே என நினைத்து மீண்டும் அதே பெட்ரோல் பங்கிற்கு சென்று 12 லிட்டர் பெட்ரோல் போட கூறியுள்ளார். அதன்படி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 12 லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டு பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் சுந்தர் ஏற்கனவே எனது காரில் 5 லிட்டர் பெட்ரோல் இருந்த நிலையில் தங்களது பெட்ரோல் பங்கில் 45 லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டு அதற்கான ரசீதையும் வைத்துள்ளேன்.
கடும் வாக்குவாதம்
எனது காரில் பெட்ரோல் மொத்த அளவு 50 லிட்டர் தான். ஆனால் தற்போது கூடுதாக நீங்கள் 12 லிட்டர் பெட்ரோல் போட்டுவிட்டீர்கள். அப்படி என்றால் எனது காரில் மொத்தம் 62 லிட்டர் பெட்ரோல் எப்படி கூடுதலாக வந்தது என்று கூறி பெட்ரோல் பங்கில் உள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு ஏராளமான வாகன ஓட்டிகள் திரண்டு வந்து இதுபோல் பலமுறை இந்த பெட்ரோல் பங்கில் முறைகேடு நடந்ததாகவும், தற்போது பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இவ்வாறு சில பெட்ரோல் பங்கில் முறைகேடுகள் நடப்பதாக கூறி சுந்தருக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மானாமதுரை போலீசார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் கூடுதலாக 12 லிட்டர் பெட்ரோல் போட்டதற்கு காரில் வந்த சுந்தர் பணம் கொடுக்காமல் மீண்டும் அதே காரில் ராமேசுவரத்தை நோக்கி புறப்பட்டு சென்றதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story