அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 10:36 PM IST (Updated: 9 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 51 இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இதனை இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே நடைமுறைப்படுத்த ஆணை வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இது சாத்தியமில்லை, வாய்ப்பில்லை என்ற வகையில் தொடர்ந்து பேசி வரும் நிதி அமைச்சர் தியாகராஜன், தனது பேச்சை வாபஸ் பெறக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலாளர் பார்த்திபன், வணிக வரித்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜிலு ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆதிசங்கரன், காந்திமதி, சாருமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர் தலைமை தாங்கினார். இதில் வட்டார நிர்வாகிகள் முருகன், நூர்ஜஹான், ஏகாம்பரம், ஞானமூர்த்தி, பத்மநாபன், தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி வட்டார செயலாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தன சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் விமல்ராஜ், செல்வம், சித்தார்த், கோவிந்தசாமி, அசன் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் வட்டார அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வட்டார அரசு ஊழியர் சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சிவகுமார், வட்ட செயலாளர் அன்பு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

51 இடங்களில் நடந்தது

இதேபோல் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஊரக வளர்ச்சத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் 51 இடங்களில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story