விழுப்புரத்தில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட 12 கிலோ ஷவர்மா பறிமுதல்


விழுப்புரத்தில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட 12 கிலோ ஷவர்மா பறிமுதல்
x
தினத்தந்தி 9 May 2022 10:42 PM IST (Updated: 9 May 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட 12 கிலோ ஷவர்மாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம், 

கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷவர்மா போன்ற துரித உணவுகளை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

12 கிலோ பறிமுதல்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி பகுதியில் இயங்கும் ஓட்டல்கள், துரித உணவகங்கள் ஆகியவற்றில் தயாரித்து விற்கப்படும் ஷவர்மா உணவை ஆய்வு செய்தனர். அப்போது 3 கடைகளில் அதிகளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட ஷவர்மா 12 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து, அந்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது.

அதிகாரிகள் எச்சரிக்கை

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ஷவர்மா தயார் செய்யும் பணியாளரும் மற்ற பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதற்கான மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும். ஷவர்மா அடுப்பானது தூசிகள் படியுமாறு சாலை ஓரத்தில் இருக்கக்கூடாது, ஷவர்மாவை நன்கு வேக வைத்த பின்னர்தான் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். மீதமான ஷவர்மாவை பரிமாறாமல் கழிவாக அகற்றிவிட வேண்டும், ஷவர்மாவை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியசில் வேக வைக்க வேண்டும், சமைப்பவர் கைகள் படாமல் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். மேற்படி வழிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story