மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாழமறுப்பு
ராமேசுவரம் விட்டில்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் உமாமகேசுவரி. இவருக்கும் கீழக்கரை வங்கியில் பணிபுரியும் ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ரமேஷ் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டாராம்.
தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்று கூறியும் ரூ.5 லட்சம் கூடுதலாக வரதட்சணை வாங்கி வந்தால் வாழ்வதாக கூறி பிரிந்து சென்று விட்டாராம். இந்தநிலையில் உமாமகேசுவரி தனக்கு திருமணத்தின்போது போட்ட நகை மற்றும் பணம், சீர்வரிசை பொருட்களை திருப்பி கேட்டபோது தரமறுத்து விட்டாராம்.
தீக்குளிக்க முயற்சி
இதுகுறித்து உமாமகேசுவரி ராமேசுவரம், கீழக்கரை போலீஸ் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த உமாமகேசுவரி தனது கைக்குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பறித்து உமாமகேசுவரியை மீட்டு அழைத்து சென்றனர்.
அப்போது தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து தனது நகை மற்றும் பொருட்களை வாங்கித்தரும்படி கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் அங்கு விரைந்து வந்து உமாமகேசுவரியிடம் விவரங்களை கேட்டறிந்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story