விழுப்புரத்தில் அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல்


விழுப்புரத்தில் அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 May 2022 10:53 PM IST (Updated: 9 May 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர் சங்கத்தினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் நியாயவிலை கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், பட்டு வளர்ச்சித்துறை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நகராட்சி திடல் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சம்பத், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் இளங்கோவன், கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில தலைவர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் சங்கர், டில்லி அப்பாத்துரை, தன்ராஜ், இளையராஜா, மாயவன், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

300 பேர் கைது

இந்த மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 300 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story