நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜந்தாங்கல், கருத்துவாம்பாடியில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
ராஜந்தாங்கல், கருத்துவாம்பாடியில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர் அருகில் ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றி வந்த ஒருவர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில் ராஜந்தாங்கல் மற்றும் கருத்துவாம்பாடி பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மாலை முதல் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு சுமார் 9 மணி வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் விவசாயிகள் பிரதிநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி ஆகியோர் இருந்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு கடிதம் ஒன்று கொடுத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தினால் அங்கு சிறிது பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story