நல்லம்பள்ளி அருகே வேடியப்பன் கோவில் கும்பாபிஷேகம்


நல்லம்பள்ளி அருகே வேடியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 May 2022 11:07 PM IST (Updated: 9 May 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே வேடியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தில் வேடியப்பன் கோவில் உள்ளது. இங்கு விநாயகா், பாலமுருகன் சன்னதிகளும் உள்ளன. இந்த கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி, கடந்த 4-ந் தேதி கும்பாபிேஷக கொடியேற்று விழா நடந்தது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், பாலமுருகன், மூலவர் வேடியப்பன் (ஈஸ்வரன்) ஆகிய விமான கோபுர கலசங்கள் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை, புரோகிதர்கள் வெகுவிமர்சையாக நடத்தி வைத்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கூன்மாரிகொட்டாய், ஈச்சம்பட்டி, கெங்கலாபுரம், கொட்டாவூர், ஏலகிரி உள்பட 14 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story