மோகனூர்-நெரூர் இடையே கதவணை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
மோகனூர்-நெரூர் இடையே கதவணை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள், கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாமக்கல்:
கலெக்டரிடம் மனு
விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே கதவணை அமைக்கும் திட்டமானது கைவிடப்பட்டு இருப்பதாக திருச்சி நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார். ஆனால் கடந்த 1-ந் தேதி மண்மங்கலத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 19 தடுப்பணை கட்டுவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் நெரூர் அணைக்கட்டுவதற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இது நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்ட மக்கள் இடையே பல்வேறு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை இந்த திட்டம் கைவிடப்படும் சூழ்நிலை இருந்தால் கூட, அதை கைவிடாமல் கதவணையை தமிழக முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று மீண்டும் உடனடியாக கட்டுவதற்கு நீர்வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதவணை அமைக்கும் திட்டம்
இது திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட கரையோரங்களில் ஊற்றுநீர் அதிகரிப்பதற்கும், அரூர், ஆண்டாபுரம், முருங்கை, காட்டுப்புத்தூர், நாகைநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகளுக்கு நீர் எடுத்து சென்று தேக்குவதற்கும் வாய்ப்பாக அமையும். இதனால் இந்த பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும்.
அது மட்டும் இன்றி, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஏதுவாக அமையும். எனவே நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மோகனூர், நெரூர் இடையே கதவணை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story