கூட்டுக்குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்


கூட்டுக்குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 9 May 2022 11:24 PM IST (Updated: 9 May 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு கூட்டுக்குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி

சப்-கலெக்டரிடம் மனு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ரா தலைமை தாங்கினார். ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

கடந்த சில ஆண்டுகளாக பாசனத்திற்கு நீர் பகிர்மானத்தின் போது அந்தந்த ஆண்டுகளில் நீர்பற்றாக்குறையானது 3 முதல் 4 டி.எம்.சி. வரை இருந்து வருகிறது.  பாசனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் நீரை கூட முழுமையாக 135 நாட்கள் வழங்க முடியாமல் சில ஆண்டுகளாக 70 முதல் 80 நாட்கள் நீரே பாசனத்திற்கு கிடைக்கிறது. 

மழைக்காலங்களில் அதிகமான நீரை தேக்கி வைக்க போதுமான கொள்ளளவு கொண்ட நீர்தேக்கம் இல்லாததால், அந்த நீர் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் உபரி நீராக வெளியேறுகிறது.

குடிநீர் திட்டங்கள்

நீர் பற்றாக்குறை நிலவுவதால் தென்னை விவசாயம் பாதிப்பு காரணமாக, அதை சார்ந்த பிரதான தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாசனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து கடந்த 1978-ம் ஆண்டு வரை பாசன நீர் இரு போகமும் 135 நாட்கள் கிடைத்து வந்தது. 

ஆழியாறு ஆற்றில் இருந்து ஏற்கனவே நிறைய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அந்த திட்டங்களுக்கு 1.5 டி.எம்.சி. நீர் ஆண்டு முழுவதும் தேவைப்படுகிறது.

தற்போது பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளை ஆதாரமாக கொண்டு ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ரூ.926 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு இந்த பகுதி பி.ஏ.பி. விவசாயிகளிடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கைவிட வேண்டும்

ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் நீர் ஆதராரங்களான நஞ்காங்சியாறு, குடகனாறு, காவேரி ஆறு மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து நீரை எடுக்காமல் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள ஆழியாற்றில் இருந்து நீரை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?, 

எனவே பி.ஏ.பி. விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story