கலெக்டரிடம் 500 பேர் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
ரிஷிவந்தியத்தை தலைமை இடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்ககோரி கலெக்டரிடம் 500 பேர், தங்களது குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து ரிஷிவந்தியம் தொகுதி வானாபுரம் தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சங்கராபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானாபுரத்தை தாலுகாவாக அறிவித்துள்ளதை கண்டித்தும், சங்கராபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரிஷிவந்தியத்தை தலைமை இடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போராட்டம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரிஷிவந்தியம் உள்பட 10 கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று தங்களது குடும்ப அட்டையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்த அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கலெக்டரிடம் மனு
இவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடும்ப அட்டையை யாரும் ஒப்படைக்க வேண்டாம், மாறாக கோரிக்கை தொடர்பாக 10 பேர் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கலாம் என்றனர். இதையடுத்து கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story