தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் 160 பேர் கைது
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட பொருளாளர் ஜான் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்று பேசினார்.
ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
கோஷங்கள்
பொது வினியோக திட்டத்துக்கு என தனி துறை உருவாக்க வேண்டும். நிறுத்தப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதோடு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story