தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 May 2022 11:44 PM IST (Updated: 9 May 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீர் தொட்டி அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான கட்டண கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைக்கு கழிவுநீர் தொட்டி அமைக்கப்படாமல் திறந்தவெளியில் விடப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பாலச்சந்தர், ஜெயங்கொண்டம், அரியலூர்.

விபத்து ஏற்படுத்தும் லாரிகள்
அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் சிமெண்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு தினமும் அதிகளவில் டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்லப்படுகிறது. அதே சமயம் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களும் இறந்து வருவது இன்றளவும் நிகழ்ந்து வருகின்றது. இதனை தடுக்க வேண்டும் என்றால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்டு ஆலைகளுக்கும் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5:30 வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்க தடை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வி.கைகாட்டி, அரியலூர். 

குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள காய்கறிகள், தின்பண்டங்களை எடுத்துச் செல்வதுடன் மளிகைப்பொருட்களையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் கலைத்து விட்டு சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகளையும், பெண்களையும் கடிக்க வருவதுபோல் பயமுறுத்துகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் வெளியே செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
விசு, நெருஞ்சிக்கோரை, அரியலூர். 

குடிநீர் இன்றி மக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, துவார் அருகே உள்ள பெத்தாரிப்பட்டி மருத்துவர் காலனி வடக்கு வீதி பகுதியில் முறையான தண்ணீர் வராததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மருத்துவர் காலனி, புதுக்கோட்டை. 

பயனற்ற கிராம சேவை மைய கட்டிடம் 
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி நடுப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 2013-2014-ம் நிதியாண்டில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல்ஆகியும் இந்த சேவை மைய கட்டிடம் திறந்து வைத்து செயல்படவில்லை. இதனால் கட்டிடத்துக்கான செலவு செய்யப்பட்ட தொகை விரயம் ஆகிக்கொண்டிருக்கிறது. பயன்படாமல் கட்டிடம் உள்ளதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மனோகரன், புன்னம், கரூர். 

சிதிலமடைந்த சிமெண்டு சாலை
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அக்ரஹாரத்திற்கு செல்வதற்காக சிமெண்டு சாலை போடப்பட்டது. இந்த சிமெண்டு சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும், சிமெண்டு சாலையின் நடுவே குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தாலும் சாலை மிகவும் சிதிலமடைந்துள்ளது. இந்த வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜி, தவுட்டுப்பாளையம், கரூர். 

சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், முள்ளால்  கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மக்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள். அது  மட்டும் இல்லாமல்  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு காட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படாமல் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முள்ளால், திருச்சி. 

புதிய பாலம் அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை பஞ்சாயத்து காமநாயக்கன்பாளையம் கிராமத்தில் மேலத்தெரு அய்யன் வாய்க்கால் பாலம் இடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  
ஜெயபால், காமநாயக்கன்பாளையம், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், பிரம்பட்டியில் இருந்து பூலாம்பட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக  உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதினால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பூலாம்பட்டி, திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருச்சி குடிநீர் வடிகால் வாரிய அலுவலக நுழைவு வாயிலில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிகண்டன், திருச்சி.

Next Story