24 மணி நேரமும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
24 மணி நேரமும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முக பழனியப்பன், செயலாளர் ராஜா, பொருளாளர் ஜெகதீசன் உள்பட நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நாட்டில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் 24 மணி நேரமும் பகல், இரவாக வணிகம் செய்து கொள்ள மத்திய அரசு ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் போலீசார் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறக்க அனுமதிப்பதில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதில் வணிக நிறுவனங்களுக்கு காவல்துறையினர் எவ்வித இடையூறு ஏற்படுத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியதோடு சில நிபந்தனைகளோடு கூடிய உத்தரவினை வழங்கியது. இந்த உத்தரவு மாநில, மாவட்ட சங்கங்களுக்கு பொதுவானதாகும்.
383 மனுக்கள்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் எங்களுடைய உணவக நிறுவனம், வணிக நிறுவனம் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என வீண் தொந்தரவுகளையும், தொல்லைகளையும் கொடுத்து வருகின்றனர். எனவே மாவட்டத்தில் 24 மணி நேரமும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல்துறையினருக்கு தக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மலர்கொடி என்ற பயனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.54,790 மதிப்பீட்டில் விலையில்லா மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரத்தினையும் மற்றும் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம், அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பேரூராட்சிகளை சேர்ந்த 14 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story