பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்
பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்து மாதவன், ஷேக் அப்துல் காதர், மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு அடிப்படை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, தனிநபர் கடன் உள்ளிட்ட 503 மனுக்களை கொடுத்தனர்.
பிச்சை எடுக்கும் போராட்டம்
திருவேங்கடம் தாலுகா மற்றும் மருதங்கிணறு கிராம விவசாயிகள் முத்துபாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கையில் தட்டு ஏந்தி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் பிச்சை கேட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக மருதங்கிணறு கிராம விவசாயிகள் மற்றும் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட மகேந்திரவாடி சாயமலை, கே.கரிசல்குளம், களப்பாளங்குளம், பழங்கோட்டை ஆகிய பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிட்டு வந்தனர். இதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்காக பயிர் காப்பீடு செய்யப்பட்டு இருந்தும் இழப்பீட்டு தொகை இதுவரை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடத்துவதாகவும் அவர்கள் கூறினர். பின்னர் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தென்காசியில் மட்டும் வழங்கப்படவில்லை என்றும் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு சென்ற வாலிபர் மாயம்
சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் பச்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கரன் என்பவர் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினருடன் கொடுத்த மனுவில், எனக்கு ஆனந்தகுமார் (வயது 26), கலா (23) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் எனது மகள் கலா மனவளர்ச்சி குன்றியவர். குடும்பத்தின் வறுமை காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு எனது மகன் ஆனந்தகுமார் மலேசியாவிற்கு 2 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு அனுப்பி வைத்தேன். ஒப்பந்த காலம் முடிவடைந்தும் தற்போது வரை எனது மகன் வீட்டுக்கு திரும்பவில்லை. அவருடன் சென்றவர்கள் வந்து விட்டார்கள். என் மகன் எந்த நிலையில் இருக்கிறான்? எங்கு இருக்கிறான்? என்பது தெரியவில்லை. தொலைபேசியிலும் சரியாக பேசவில்லை. எனவே என் மகனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story