குண்டாறு அணை சுவர் சேதம் உடனே சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்


குண்டாறு அணை சுவர் சேதம் உடனே சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2022 12:59 AM IST (Updated: 10 May 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

குண்டாறு அணை சுவர் சேதமடைந்ததால், அதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

செங்கோட்டை:
குண்டாறு அணை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை அமைந்துள்ளது. மழை காலங்களில் மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் முதலில் நிரம்புவது குண்டாறு அணையாகும்.
இந்த அணையின் முழு கொள்ளளவு 36.10 அடியாகும். எந்த அளவுக்கு விரைவாக இந்த அணை நிரம்பினாலும், அதே அளவுக்கு மிக விரைவில் தண்ணீரின்றி குளம் போல் காட்சி அளிக்கும்.
1,122 ஏக்கர் நிலங்கள் பாசனம்
குண்டாறு அணை மூலம் நேரடியாக 731 ஏக்கர் நிலமும், மறைமுகமாக 391 ஏக்கர் நிலமும் என மொத்தம் 1,122 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
மேலும், இந்த அணையின் மூலம் தஞ்சாவூர்குளம், நிறைகுளம், கீழக்கொட்டாகுளம், மேலகொட்டாகுளம் உள்பட மொத்தம் 12 குளங்கள் பயன்பெறுகிறது. பல்வேறு கிராமங்களில் குடிநீருக்காகவும் இந்த அணையின் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
அணையில் சேதம்
இப்படி விவசாயிகளுக்கும், பல்வேறு கிராம மக்களின் குடிநீருக்காகவும் பயன்படும் இந்த அணை தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது.
அதாவது, அணையின் உட்பக்க சுவரில் கற்கள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. அணை பகுதியும் தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது. அணை சேதம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் “குண்டாறு அணை தண்ணீர் மூலம் நாங்கள் பயன் அடைந்து வருகிறோம். தற்போது, அந்த அணை சேதம் அடைந்து உள்ளது. இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், சேதம் அடைந்து காணப்படும் அணையின் உட்பக்க சுவர் பகுதியை பொதுப்பணித்துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும். தற்போது தண்ணீரின்றி அணை வறண்டு உள்ளதால் சீரமைப்பு பணியை எளிதாக செய்ய முடியும்” என்றனர்.

Next Story