தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைத்தொட்டி வேண்டும்
மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு, குடிசைவாரிய காலனி பகுதியில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படவில்லை. இதனால் குப்பைகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுகிறது. தேங்கிய குப்பைகளில் விஷபூச்சிகள் முதலானவை அதிக அளவில் நடமாடி வருகின்றன. மேலும் இப்பகுதி சுகாதார சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும்.
கண்ணாயிரமூர்த்தி, அவனியாபுரம்.
பயன்பாட்டிற்கு வருமா?
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக பொது கழிவறைகள் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கழிவறைகள் இன்னும் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்காக கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூட்டி கிடக்கும் கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
மதுரை ஆனையூர் அருகே கூடல்புதூர் 19-வது வார்டு அன்புநகர் பகுதியில் உள்ள கழிவுநீா் தொட்டி உடைந்து உள்ளது. இதனால் கழிவுநீரானது நிரம்பி சாலைகளில் வழிந்தோடுகிறது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், கூடல்புதூர்.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள கூமாபட்டி-கான்சாபுரம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சேதமடைந்த சாலையில் செல்வதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள், கூமாபட்டி
மரக்கிளை அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சங்கராபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது ராம்சுந்தர் மற்றும் செந்தில் நகர் பகுதிகள். இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்வயர்களானது வளர்ந்துள்ள மரக்கிளைகளின் இடையே மோதி செல்கிறது. இதனால் ஏற்படும் குறைந்த மின்அழுத்தத்தால் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. தேர்வுநேரம் என்பதால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்வயர்கள் செல்ல இடையூறாக உள்ள மரக்கிளைகளை இப்பகுதியில் அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், சங்கராபுரம்.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை 63-வது வார்டு பெத்தானியபுரம் நாகுநகர் 2-வது தெருவின் நடுவே உள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியானது உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. திறந்து கிடக்கும் மூடியால் அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் பொதுமக்களும் ஒருவித அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன்னர் சேதமான கழிவுநீர் தொட்டியின் மூடியை சரிசெய்ய வேண்டும்.
நம்புராஜ், பெத்தானியாபுரம்.
கால்நடைகள் தொல்லை
ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகள், ஆடுகள், குதிரைகள் முதலானவை அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை காலை நேரத்தில் சாலையை மறித்து கொண்டு நடமாடுகின்றன. இரவில் ரோட்டிலேயே படுத்து ஓய்வு எடுத்து கொள்கின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கால்நடைகளால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராம், ராமநாதபுரம்.
பெயர்பலகை வேண்டும்
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள நடராஜ்நகர், எடிசன் தெரு, சரஸ்வதி நகர் போன்றவற்றில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம நுழைவுவாயிலான சரஸ்வதி நகர் முதலானவைக்கு பெயர்பலகை இல்லை. இதனால் இப்பகுதிக்கு வரும் வெளியூர்வாசிகள், அவசர தேவைக்காக வரும் ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவை வழிதவறும் நிலை உள்ளது. எனவே கோச்சடை பகுதியில் உள்ள தெருக்களுக்கு முறையாக பெயர்பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துரத்தினம், கோச்சடை.
குடிநீர் தட்டுப்பாடு
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நீர் எடுத்து வருகிறார்கள். கோடை காலமாவதால் மக்களுக்கு சரியான முறையில் நீரை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹாிஹரன், எஸ்.புதூர்.
பொதுமக்கள் சிரமம்
மதுரை மாவட்டம் திருநகர்-நகர்ப்பகுதி சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் குறைவாக உள்ளதால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் ஓளியானது வாகனம் ஒட்டுபவர்களின் கண்களில் விழுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாக்கும் தடுப்புச்சுவரை அகற்ற அல்லது அதனின் உயரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகவன், திருநகா்.
Related Tags :
Next Story