முக்கூடல் அருகே ஓட்டல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது


முக்கூடல் அருகே ஓட்டல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 May 2022 1:17 AM IST (Updated: 10 May 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுெதாடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

முக்கூடல்:
ஓட்டலில் தகராறு
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஓடக்கரை துலுக்கர்பட்டி மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் எடிசன் (வயது 23). இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு புரோட்டா சாப்பிடுவதற்காக முக்கூடலில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். 
அங்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த சீதாராம் மகன் செண்பகம் (23) என்பவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, எடிசன் சத்தமாக ஆபாச வார்த்தைகளால் நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து செண்பகம், பக்கத்தில் பெண்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி பேசாதீர்கள் என்று கூறினார். இதனால் எடிசனுக்கும், செண்பகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் செண்பகம் அரியநாயகிபுரத்தில் உள்ள தனது அண்ணன் தொழிலாளியான கணேசன் (26) என்பவரிடம் சம்பவம் குறித்து கூறினார். உடனடியாக கணேசன், அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பத்திரகாளி (25) என்பவரை அழைத்துக் கொண்டு ஓடக்கரை துலுக்கர்பட்டிக்கு சென்றார். அவர்கள் அங்கு இருந்த எடிசனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவருக்கு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். பத்திரகாளியை வலைவீசி தேடிவருகிறார்கள். 
சமூக வலைதளத்தில் பரவியது
இதற்கிடையே ஓட்டலில் நடந்த தகராறு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Next Story