சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தல்


சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2022 1:46 AM IST (Updated: 10 May 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்
ஆர்ப்பாட்டம்
சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை தி.மு.க. அரசு கைவிடக்கோரியும், விளை நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் சேலத்தில் நேற்று எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டியக்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். குப்பனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வராஜூ, விவசாய சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, நடராஜன், செல்வராஜ் உள்பட ஏராளமான விவசாயிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும், விளை நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அனுமதிக்க மாட்டோம்
இது குறித்து எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டிய தலைவர் கந்தசாமி நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 8 வழிச்சாலையை ஏற்கமாட்டோம் என்று கூறினார்கள். தற்போது சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசோடு தமிழக அரசு ஒத்துப்போக கூடாது.
சேலம், தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும். அதேசமயம், எட்டு வழிச்சாலையை எந்த ரூபத்திலும் அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால் தொடர் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.
சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story