தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-ராஜன், பாப்பம்பாளையம், நாமக்கல்.
=====
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட மொரப்பூர் பகுதியில் மின்கம்பங்களில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பல நேரங்களில் மின்பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மின்கம்பிகளில் வளரும் செடி, கொடிகள், மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலன், மொரப்பூர், தர்மபுரி.
=====
சாலை வசதி தேவை
சேலம் ஜங்சன் ரெயில்நிலையத்தில் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் 5-வது பிளாட்பாரம் அருகே உள்ள பகுதியில் தொடங்கியது. இந்த டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு ெரயில்வே கோட்டம் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாகவும், பழைய சூரமங்கலம் வழியாகவும் செல்லலாம். தற்போது இந்த முன்பதிவு மையத்திற்கு செல்லும் சாலையில் பராமரிப்பு இல்லாமல் கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சரிசெய்து தரவேண்டும்.
அருண், சூரமங்கலம், சேலம்.
===
சுகாதார கேடு
சேலம் இரும்பாலை மெயின்ரோடு பால்பண்ணை அடுத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது, இதன் அருகே உள்ள சாலையில் இருபுறமும் கோழி கழிவுகள், மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசி சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிபடுகின்றனர். எனவே தளவாய்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மஜ்ரா கொல்லப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், பால்பண்ணை, சேலம்.
===
நோய் தொற்று அபாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பள்ளிவாசல் அருகே சாக்கடை கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் ெசல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்தால் மழைநீரும் செல்ல வழி இல்லாமல் உள்ளது. இதனால் மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
முபாரக், கிருஷ்ணகிரி.
====
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
சேலம் சிவதாபுரம் அடுத்த பனங்காடு ஆண்டிப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது இந்த நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து அதன் தூண்கள் மற்றும் தொட்டியின் மேற்பரப்பு பெயர்ந்து உள்ளது. இதனையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், பனங்காடு. சேலம்.
சேலம் ஊராட்சி ஒன்றியம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் மூலம் வட்டமுத்தாம்பட்டி புது காலனி 1, 2 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் தூண்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதன் அருகாமையில் பள்ளி உள்ளதால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் முன்பு இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரிசெய்யவேண்டும்.
-ராஜா, வட்டமுத்தாம்பட்டி, சேலம்.
===
சேதமடைந்த துணை சுகாதார நிலையம்
சேலம் ஆண்டிப்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்பரப்பு மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இங்கு மகப்பேறு மருத்துவம், காய்ச்சல், சளி உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள இந்த துணை சுகாதார நிலையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரை, ஆண்டிப்பட்டி, சேலம்.
Related Tags :
Next Story