நகை, செல்போன்களை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் கைது
மோட்டார் சைக்கிளில் வந்து நகை, செல்போன்களை பறித்த ஒருவன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
மதுரை
மோட்டார் சைக்கிளில் வந்து நகை, செல்போன்களை பறித்த ஒருவன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
நகை, செல்போன்கள் பறிப்பு
மதுரை அருள் நகர், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 30). விவசாயி. சம்பவத்தன்று இவர் அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி, செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். மேலும் அதே கும்பல் சொக்கலிங்கம் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெத்தானியாபுரம், பாத்திமா நகர் சந்தோஷ்(19) என்பவரிடமும், பொன்மேனி செண்பகமூர்த்தி மகனிடமும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
கைது
அதில் செல்போன், நகைப்பறிப்பில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவன் அலங்காநல்லூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அலங்காநல்லூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப்(32) என்பதும், அவருக்கு வழிப்பறியில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் போலீசாரிடம் கூறும்போது, வழிப்பறியில் ஈடுபட்ட செல்போன்கள், நகைகள் ஆகியவை ஒற்றைக்கண் பாண்டியராஜனிடம் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் தெற்குவாசல் பகுதியில் திருடியது என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து பிரதாப்பை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாண்டியராஜன் மற்றும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story