“ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்”-மதுரை ஆதீனம் பேட்டி
“ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்”-மதுரை ஆதீனம் பேட்டி
மதுரை
தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் எனவும் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு இனிப்பு
தருமபுர ஆதீன மடத்தில் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதித்த தடையை நீக்கி தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை வரவேற்று மதுரை ஆதீன மடம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
திருவையாறு நந்தி பெருமானின் 16 திருமுறைகளில் ‘ஆடும் பல்லக்கு’ என்ற பாடல் இடம்பெற்று உள்ளது.
பட்டினப்பிரவேசம் என்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மங்கள நிகழ்வு ஆகும். அதற்கு தமிழக அரசு நீண்ட போராட்டத்துக்கு பிறகு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்த பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சைவம்-வைணவம் ஆதரவு
தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமய சம்பிரதாய கடமைகள் உள்ளன. ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்-அமைச்சர் அரவணைத்து செல்ல வேண்டும்.
பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில், நடந்தது நடந்து விட்டது. இனி நடப்பது நல்லதாக அமைய வேண்டும். தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்துக்கு ஜீயர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். சைவம், வைணவம் பேதமின்றி அனைவரும் எங்களுக்கு ஆதரவாக நின்றது மகிழ்ச்சி தருகிறது.
ஆதரவு கிடையாது
எனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதற்கு அரசியல் பின்புலமும் உள்ளது. இது யாருக்கும் அடிபணியாத அரசு என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
எனவே அடுத்த ஆண்டு தருமபுரம் ஆதீன மடத்தில் பல்லக்கு சேவை நடக்குமா? என்பது பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம். நான் தருமபுரம் கோவிலுக்கு வரக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். இதனை தமிழக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன்.
ஆதீன மடத்தில் பா.ஜ.க., இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ள போவதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள். முந்தைய ஆதீனம் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளின் போது ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி அல்ல. எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது.
உயிருக்கு ஆபத்து
ஆதீன கோவில்களில் அன்னதானம் வழங்க திரைமறைவில் தடை விதிக்கப்படுகிறது. எங்களுக்கு கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு தருவதில்லை.
தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறேன்.
சன்னியாசிகள், மத சடங்குகளை பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடக்கிறார்களா? என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் கூறியதாக அறிந்தேன். நான் ஓட்டல்களில் சாப்பிடுவது இல்லை. சமைத்து தான் சாப்பிடுகிறேன். நான் கோவில் கோவிலாக பாதயாத்திரை போனவன்.
கம்யூனிஸ்டுகள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக நான் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது ஆன்மிக அரசு என்று தருமபுரம் ஆதீனம் தெரிவித்து உள்ளார். அது அவருடைய கருத்து. நான் இந்த விஷயத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story