சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை? 113 ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு 133 கிலோ இறைச்சி பறிமுதல்


சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை? 113 ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு 133 கிலோ இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2022 2:03 AM IST (Updated: 10 May 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து 113 ஓட்டல்களில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சேலம்
ஓட்டல்களில் ஆய்வு
கேரளாவில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘ஷவர்மா’ விற்பனை செய்யும் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் ‘ஷவர்மா’ மற்றும் இறைச்சிகள் சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் நேற்று மாவட்டம் முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட் பல்வேறு இடங்களிலும் மற்றும் அயோத்தியாப்பட்டணம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 113 அசைவ ஓட்டல்களில் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
133 கிலோ இறைச்சி பறிமுதல்
இந்த ஆய்வில், 19 ஓட்டல்களில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கெட்டுபோன கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன், நண்டு போன்றவை இருப்பதும், சில ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 133 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.  சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை விற்பனை செய்தது தொடர்பாக 8 ஓட்டல்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதமும், 22 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story