கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
கொலை
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருந்தக உரிமையாளர் நாகராஜன் மாமூல் தர மறுத்ததால், அவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் 4 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு லாடபுரம் கிராம மக்கள் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள், நாகராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சந்தோஷ், நவீன் ஆகிய 2 பேரை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமூல் கேட்கும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும். கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நாகராஜன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
வாக்குவாதம்
மேலும் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்றனர். ஆனால் பொதுமக்கள் நாங்கள் அனைவரும் செல்வோம் அல்லது கலெக்டர் இங்கு வந்து மனுவை பெற்றுச்செல்ல வேண்டும் என்றனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் வந்து கிராம மக்களிடம் மனுவினை பெற்றுக்கொண்டு, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.