சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கடைப்பிடிக்காவிட்டால் மசூதி, கோவிலில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கடைப்பிடிக்காவிட்டால் மசூதி, கோவிலில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2022 3:30 AM IST (Updated: 10 May 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கடைப்பிடிக்காவிட்டால் மசூதி, கோவில் உள்பட வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

மசூதிகளில் ஒலிபெருக்கி

  நாடு முழுவதும் மசூதிகள், கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் வசிப்பிடங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்ப தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் மசூதிகளில் சட்டவிரோதமாக ஒலிபெருக்கி வைத்திருப்பதாக கூறி உத்தரபிரதேசம், மராட்டியத்தில் இந்து அமைப்பினர் மசூதிகளில் இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இதுபோல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடகத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

  குறிப்பாக மசூதிகளில் ஒலிப்பெருக்கியில் தொழுகையின் போது வெளிப்படுத்தும் சத்தத்திற்கு (அசான்) தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபரப்பப்படும் சத்தம் இன்னும் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  இதை கண்டித்தும், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற கோரியும் நேற்று ஸ்ரீராமசேனை உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் இந்து கோவில்களில் சுப்ரபாதம் உள்பட இந்து பாடல்கள் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்து அமைப்பினர் போராட்டம்

  அதன்படி நேற்று மைசூரு, சிக்கமகளூரு, மங்களூரு, பெலகாவி உள்பட மாநிலம் முழுவதும் இந்து அமைப்பினர் இந்து கோவில்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை கட்டி, அதில் சுப்ரபாதம், ஆஞ்சநேயர் பாடல் உள்பட இந்து பாடல்களை ஒலிபரப்பினர்.

  கலபுரகி டவுனில் ஜாகட் சர்க்கிளில் உள்ள மார்க்கெட் மசூதியில் ஒலிபெருக்கிகளை அகற்ற ஸ்ரீராமசேனை அமைப்பினர் திரண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் அமைப்பினரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியினரும் அங்கு குவிந்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

  இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஸ்ரீராமசேனை அமைப்பினரை கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து பதற்றம் நீடித்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

போராட்டம் தொடரும்

  இதற்கிடையே மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் அறிவித்துள்ளார்.

  இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அதிகாரிகளுக்கு உத்தரவு

  அசான் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும். இதை நல்லிணக்கத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அரசு விரும்புகிறது. பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டும் சில அறிவுரைகளை கூறியுள்ளது. 

அதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதில் மீண்டும் ஒருமுறை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

முதல்-மந்திரி ஆலோசனை

  அதன் பிறகு இந்த ஒலி மாசு விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார்.

  இந்த கூட்டத்தில் பேசிய பசவராஜ் பொம்மை, ஒலி மாசு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதோ அங்கு ஒலி மாசு அளவை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய ஒலிப்பெருக்கிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றறிக்கை இன்று வெளியீடு

  இதுகுறித்து ஒரு தெளிவான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

  இந்த சுற்றறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story