ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் மொபட் மீது லாரி மோதி வியாபாரி சாவு; மகன் கண் முன்னே பரிதாபம்


ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் மொபட் மீது லாரி மோதி வியாபாரி சாவு; மகன் கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 10 May 2022 4:45 AM IST (Updated: 10 May 2022 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் மொபட் மீது லாரி மோதி மகன் கண் முன்னே வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு
ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தில் மொபட் மீது லாரி மோதி மகன் கண் முன்னே வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
பொம்மை வியாபாரி
ஈரோடு அருகே உள்ள பூந்துறை புதுகாலனியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 50). பொம்மை வியாபாரி. இவர் தனது மகன் ஜோதி, பேரன் சூர்யா ஆகியோருடன் பொம்மைகள் வாங்குவதற்காக ஈரோட்டுக்கு மொபட்டில் வந்தார். பின்னர் அவர்கள் பூந்துறை நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஈரோடு காளைமாட்டுசிலையை கடந்து ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மொபட்டில் பயணம் செய்த 3 பேரும் தடுமாறி கீழே விழுந்தார்கள். இதில் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு விபத்தில் பலியான கலியமூர்த்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் கண் முன்னே வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பழுதடைந்த சாலை
கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் பல மாதங்களாக சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் தினமும் மாலை நேரங்களில் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். பெரிய பள்ளங்கள் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் பலர் தவறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், சாலை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை பழுது காரணமாக தற்போது விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ரெயில்வே நுழைவு பாலத்தில் பழுதடைந்த சாலைகளை முழுமையாக அகற்றிவிட்டு புதிய சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story