குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து 528 கட்டிடங்கள்; பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்


குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து 528 கட்டிடங்கள்; பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 10 May 2022 5:23 PM IST (Updated: 10 May 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து 528 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நெமிலிச்சேரி ஏரி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து ஏராளமானோர் கட்டிடங்கள் கட்டி உள்ளதாகவும், ஏரிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதாகவும் வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.

பின்னர், இங்குள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறையின் நீர் ஆதாரத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, நீர் ஆதாரத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

528 பேர் ஆக்கிரமிப்பு

அதில், நெமிலிச்சேரி ஏரியை 528 பேர் ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் விளக்கத்துக்கு பின்பு சட்டத்துக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவளம் வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி அவற்றை பாதுகாக்கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கவும், பல்வேறு வகையான மரங்களை நடவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் நெமிலிச்சேரி ஏரியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ததும் ஏற்கனவே இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்டாத வகையில் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கலெக்டர் அறிக்கை

மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், ‘நெமிலிச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கூட்டுக்குழு பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அவரது தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டு உள்ளது. இதற்காக வழக்கு விசாரணை 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.


Next Story