உப்பாறு ஓடையின் அருகில் கொட்டி செல்வதால் நோய்கள் பரவும் அபாயம்
உப்பாறு ஓடையின் அருகில் கொட்டி செல்வதால் நோய்கள் பரவும் அபாயம்
போடிப்பட்டி
குடிமங்கலம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் மருத்துவ கழிவுகளை உப்பாறு ஓடையின் அருகில் கொட்டி செல்வதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மருத்துவமனைகளில் தொற்றும் நோய்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதில் தினசரி வெளியாகும் மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்கென மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதன்படி மருத்துவக்கழிவுகளை அழிக்க ரசாயன சுத்திகரிப்பு, அதிக வெப்பத்தில் எரித்து சாம்பலாக்குதல், உருச்சிதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மருத்துவக்கழிவுகளை கையாள்வதற்கென பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. ஆனால் இதற்கென ஒரு தொகை செலவு செய்ய வேண்டியதுள்ளது. இதனால் ஒரு சில மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீசிச்செல்லும் அவலம் உள்ளது.
கடும் நடவடிக்கை
அந்த வகையில் உடுமலையையடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் உப்பாறு ஓடைக்கு அருகில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துக் குப்பிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் வீசியெறியப்பட்டுள்ளன. இதுபோன்ற மருத்துவக்கழிவுகள் உப்பாறு ஓடைக்குள்ளும் வீசப்பட்டிருக்கும் அபாயம் உள்ளது. இதனால் பலவிதமான நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.
கொரோனா என்னும் கொடிய நோய்த்தொற்றிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் அபாயத்தை உருவாக்கக்கூடும். எனவே இதுபோன்று பொதுவெளிகளில் மருத்துவக்கழிவுகளை வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story