புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளை மூடி `சீல்' வைக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளை மூடி `சீல்' வைக்கப்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
`சீல்’ வைப்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஒருங்கிணைப்பில் உணவு பாதுகாப்பு துறையும், போலீஸ் துறையும் இணைந்து மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட பொருட்களை வேனில் கடத்தி வந்து விற்பனை செய்த எட்டயபுரம் மேலநம்பிபுரம் அஜித்குமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, எட்டயபுரம் மிக்கேல்ராஜ் என்பவருக்கு சொந்தமான சேவுக்கடை, சவேரியாபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான அரிசிக்கடை ஆகிய 3 கடைகளும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒப்புதலுடன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்த பரிந்துரையின்படி மூடி `சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று புதுக்கோட்டை மங்களகிரி விலக்கில் உள்ள ஓட்டலில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால், அந்த ஓட்டல் மூடி `சீல்' வைக்கப்பட்டது.
நடவடிக்கை
மேலும் உணவு வணிகர்கள் எவரேனும் மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையை மூடி `சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களின் விற்பனை குறித்தோ அல்லது அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 94440 42322 என்ற மாநில வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கு அனுப்பலாம். புகாரை பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும்.
மேலும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story