இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு சிறுமி ரூ.3 ஆயிரம் நிதியுதவி
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த 8 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அவர் வழங்கினார்.
இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க நிதியுதவி அளிக்க முன்வருமாறு பொதுமக்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வரும் 10 வயது சிறுமி லட்சுமிபிரியா, தனது சேமிப்பு நிதியிலிருந்து ரூ.3 ஆயிரத்தை எடுத்து காசோலையாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story