வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 10 May 2022 8:17 PM IST (Updated: 10 May 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

ீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

உப்புக்கோட்டை:

கவுமாரியம்மன் கோவில்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 8 நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா  இன்று தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. 
விழாவையொட்டி இன்று  கவுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. மஞ்சள் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடினார்கள். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றங்கரையில் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் முன்பு உள்ள பெரிய தொட்டியில் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
இது தவிர கரகம், காவடி, ஆயிரம் கண்பானை, மண்கலயத்தில் தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றுதல் மற்றும் உடலில் சேறு பூசி கவுமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

பக்தர்கள் கூட்டம்
திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலை 1 மணியில் இருந்தே வரத்தொடங்கினர். உப்புக்கோட்டை விலக்கில் இருந்து உப்பார்பட்டி விலக்கு வரை சுமார் 2 கிலோமீட்டர் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வசதிக்காக உப்புக்கோட்டை விலக்கு மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. 
தேனி, போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், வருசநாடு ஆகிய ஊர்களில் இருந்து வரும் சிறப்பு பஸ்கள் உப்புக்கோட்டை விலக்கிலும், சின்னமனூர், தேவாரம், கம்பம், குமுளி ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. 
பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர குடிநீர் தொட்டியும், தற்காலிக குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுவதை தவிர்க்க 400 துப்புரவு பணியாளர்கள் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

போலீஸ் பாதுகாப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, கடத்தல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸ் நிலையம், கோவில் வளாகம் உள்பட 5 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் போலீசார் வீடியோ கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். இதே போன்று தேனி தீயணைப்பு கோட்ட அலுவலர் கல்யாண குமார் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்கள் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 விழாவையொட்டி நாளை (புதன்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடும்,  நாளைமறுநாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 13-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. 16-ந்தேதி தேர் நிலைக்கு வருதல் மற்றும் முத்துப்பல்லக்கில் தேர் தடம் பார்த்தல், 17-ந்தேதி ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
சித்திரை திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுரேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் மற்றும் கோவில், பேரூராட்சி பணியாளர்கள் செய்து உள்ளனர்.


Next Story