ஊட்டியில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
சமவெளி பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஊட்டியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.70- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி
ஊட்டியில் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கிலோ ரூ. 70- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி உழவர் சந்தை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளை நிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் தக்காளி கடந்த சில நாட்களாக கிடுகிடுவென விலை அதிகரித்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.64 -க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.68-க்கும், ஊட்டி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ. 70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-
மேலும் விலை உயர வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி 2,000 கிலோ தக்காளி கொண்டு வரப்படுகிறது. இதன்படி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 75 சதவீதமும், காரமடை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 25 சதவீதமும் கொண்டு வரப்படுகிறது. தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.
இந்த மழை ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம். இதேபோல் மற்ற காய்கறிகள் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு:- ஒரு கிலோ , கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.24-, பெரிய வெங்காயம் ரூ.26, அவரைக்காய் ரூ.55, முருங்கைக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.