முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி


முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி
x
தினத்தந்தி 10 May 2022 8:37 PM IST (Updated: 10 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. ஒவ்வொரு கால நிலைகளுக்கு ஏற்ப வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பயிற்சி வகுப்பு 

இந்த நிலையில் வருகிற ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முதுமலை புலிகள் காப்பகத்தின் (உள் மண்டலம்) தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி சரக வனப்பகுதியில் 11-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தெப்பக்காட்டில் உள்ள வன உயிரின மேலாண்மை மையத்தின் வன ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.

74 பேருக்கு பயிற்சி

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வன விலங்குகளை நேரடியாக காணுதல், மறைமுக தடயங்கள், விலங்குகளின் எச்சங்கள், நேர்கோட்டுப்பாதையில் தாவர உண்ணிகளை கணக்கெடுத்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் 74 பேர் கலந்து கொண்டனர். இதில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் ஓம்கார், வனச்சரகர் மனோஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story