கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் தொடர் விபத்து சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். தொடர் விபத்துகளை தடுக்க வாகனங்களை 2-வது கியரில் இயக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். தொடர் விபத்துகளை தடுக்க வாகனங்களை 2-வது கியரில் இயக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.
சுற்றுலா வந்தனர்
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினர் 15 பேருடன் கடந்த சில தினங்களுக்கு முன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சுற்றுலா வேனை பாலன் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தட்டப்பள்ளம் அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
வேன் கவிழ்ந்தது
இதனால் வேன் தறிகெட்டுஓடி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விழுந்தது. வேனில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றும்படி அலறினார்கள். இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் கோத்தகிரி ரோந்துப் பணி சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளின் உதவியுடன் வேனில் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2-வது கியரில் பாதுகாப்பாக இயக்க வேண்டும்
விபத்திற்குள்ளான வேன் இரும்புத் தடுப்பில் மோதி சாலையில் கவிழாமல் இருந்திருந்தால், சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதால், மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் சுற்றுலா வாகன டிரைவர்கள், தங்களது வாகனங்களை 2-வது கியரில் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதே சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 3 சுற்றுலா வேன்கள் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளாகியதுடன், வெளி மாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story