‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 May 2022 8:41 PM IST (Updated: 10 May 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி;
ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டது

தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் பெரியகிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலையில் ஊர்பெயர் வழிகாட்டி பலகை இல்லாமல் இருந்தது. இதனால் அந்த வழியாக கீழக்கலங்கல் செல்வதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கீழக்கலங்கலை சேர்ந்த கணேசன் என்பவர் ஊர்பெயர் வழிகாட்டி பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது, வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

சுகாதாரக்கேடு 

நெல்லை பாளையங்கோட்டை 34-வது வார்டு அம்பிகாபதி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் தெருவோரத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேகட்டுக்கொள்கிறேன்.
சேசு, பாளையங்கோட்டை.

குண்டும் குழியுமான சாலை

ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் இருந்து தோப்புவிளை, ரம்மதுபுரம், உறுமன்குளம் வழியாக திசையன்விளைக்கு செல்லும் சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் திசையன்விளைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆகவே குண்டும், குழியுமாக உள்ள இந்த சாைலயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அந்தோணி பிச்சை, தோப்புவிளை. 

காட்சி பொருளான குடிநீர் தொட்டி 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜ் நகர் 2-ம் தெருவில் பிள்ளையார் கோவில் முன் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. மேலும், இந்த தொட்டியில் மோட்டார் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தென்னரசு, சங்கரன்கோவில்.

மின்விளக்கு அமைக்கப்படுமா?

மத்தளம்பாறையில் குற்றாலம் விலக்கு பகுதியில் உள்ள சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால், விலக்கு பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பகுதியில் மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம். 

பழுதடைந்த அடிபம்பு 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குதிரைமொழி கிராமம் வடக்கு மெயின் ரோட்டில் அடிபம்பு ஒன்று உள்ளது. இந்த அடிபம்பு கடந்த 6 மாதங்களாக பழுதடைந்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த அடிபம்பை சரிசெய்து பொதுமக்களின் தாகம் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மூர்த்தி, உடன்குடி.

வழிகாட்டி பெயர் பலகை வேண்டும்

கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணி தாமஸ்நகர் மணிக்கூண்டு அருகில் 3 சந்திப்பு பகுதி உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தாமஸ்நகர் ஊருக்கு செல்லும் வழி என்று பெயர் பலகை இல்லாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, அந்த பகுதியில் தாமஸ்நகர் செல்லும் வழி என்று வழிகாட்டி பெயர் பலகை வைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அண்ணாதுரை, தாமஸ்நகர்.

வாய்க்கால் படிக்கட்டுகள் சீரமைக்கப்படுமா? 

ஆழ்வார்திருநகரி நாராயண சுவாமி கோவிலுக்கு பின்னால் உள்ள வாய்க்காலில் படிக்கட்டுகள் இடிந்து விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கால்வாயில் இறங்கி குளிக்க, துணிகளை துவைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். கடந்த 6 மாதங்களாக இதே நிலை நீடித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்கால் பட்டிக்கட்டுகளை சீரமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தணிகாசலம், ஆழ்வார்திருநகரி.


Next Story