நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,272 மாணவ- மாணவிகள் எழுதினர்


நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,272 மாணவ- மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 8:49 PM IST (Updated: 10 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வை மாணவ- மாணவிகள் 7,272 பேர் எழுதினர்.தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக கூறினார்கள்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில்  தொடங்கிய பிளஸ்-1 தேர்வை மாணவ- மாணவிகள் 7,272 பேர் எழுதினர்.தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக  கூறினார்கள்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 5-ம் தேதி பிளஸ்- 2 பொதுத்தேர்வும், 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கான தேர்வு தொடங்கியது.

 இதையொட்டி காலை 9.45 மணிக்கு மாணவ- மாணவிகள் தேர்வு அறைக்குள் வந்தனர். 10.00 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டன. பின்னர் காலை 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.  நேற்றைய தேர்வு எளிதாக இருந்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

391 பேர் வரவில்லை

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுத 39 மையங்கள் தயார் படுத்தப்பட்டிருந்தது. 7,663 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில் நேற்று 7,272 பேர் தோ்வு எழுதினர். 391 பேர் எழுதவில்லை. தேர்வுப் பணிகளில் 43 முதன்மை கண்காணிப்பாளர்கள், 41 துறை அலுவலர்கள், 475 அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 13 பேர் என 700-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சென்று சோதனை செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எளிதாக இருந்தது

தேர்வு குறித்து கோத்தகிரி அரசு மேல் நிலைப் பள்ளி, பிளஸ்-1  மாணவன் சந்தோஷ் கூறியதாவது:- அரசு பொதுத் தேர்வில் தமிழ் வினாத் தாளில் கேட்கப்பட்டிருந்த வினாக்களில் 6 மதிப்பெண் வினாக்கள் 3 மற்றும் செய்யுள் மனப்பாடப் பகுதியில் 6 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. மற்ற வினாக்கள் எளிதாக இருந்தன எனறார். 
கேர்கம்பை ஹில் போர்ட் பள்ளி மாணவி மகாலட்சுமி, தமிழ்ப் பாடத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மிக எளிதாக இருந்தன. ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்பித்திருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே தேர்வை விரைவாக எழுத முடிந்தது. எனவே 85 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோத்தகிரி பாண்டியராஜ் நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி தர்ஷினி, தமிழ் தேர்வு வினாத்தாளில் கேட்கபட்டிருந்த வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. 90 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண்கள் பெற முடியும் என எதிர்பார்க்கிறேன் என்றார். 

Next Story