கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் விரிசல்
கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்து உள்ளனா். எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொள்ளிடம்:-
கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்து உள்ளனா். எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சோதனை சாவடி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தின் வடக்கு எல்லையான கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலம், மயிலாடுதுறை மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் இருந்துவருகிறது. கடந்த 1950-ம் ஆண்டு முதல் இந்த பாலத்தின் வழியே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
24 மணி நேரமும்...
இரவு பகல் என 24 மணி நேரமும் இந்த பாலத்தை கடந்து இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று கொண்டே இருக்கும். இன்றுவரை இந்த பாலம் தரமாகவும், வலிமையுடனும் இருந்துவருகிறது. ஆனால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் இடையிடையே இணைப்பு உள்ளது. இந்த இணைப்பு பகுதியில் இரும்பு ராடு வைக்கப்பட்டு சிமெண்டு கான்கிரீட் கொண்டு பூசப்பட்டுள்ளது.
விபத்துகள்
இந்நிலையில் 3 அல்லது 4 மாதத்துக்கு ஒருமுறை இந்த பாலத்தின் இணைப்பு பகுதியில் உள்ள இரும்பு ராடு பெயர்ந்து விடுவதால் உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் பாலத்தின் நடுவே பள்ளம் தோன்றுகிறது. இதனால் பாலத்தின் வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள்.
இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து கோர விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் நடுவே இணைப்பு பகுதியில் உள்ள சிமெண்டு கான்கிரீட் உடைந்து இணைப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் ராடு வெளியே தெரியும் அளவுக்கு உள்ளது. இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் கொள்ளிடம் பாலத்தை கடந்து செல்லும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே தற்போது கொள்ளிடம் பாலத்தின் நடுவே ஏற்பட்டுள்ள விரிசலை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Related Tags :
Next Story