தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் விழா
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் விழாவை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதி நெல்லை நீர்வளம், நம் தாமிரபரணி இயக்கம், தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற பல்வேறு இயக்கங்கள் உருவாக்கப்பட்டு தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் இணைந்து தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை பகுதியையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார்.
இதைத்தொடர்ந்து " நீர்நிலைகளை பாதுகாப்போம் தூய பொருநை நெல்லைக்கு பெருமை" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நீர்நிலைகளை பாதுகாக்க தானாக முன்வந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விக்கிரமசிங்கபுரம் கிரிக்கெட் மூர்த்தி, கல்லிடைக்குறிச்சி லூர்துராஜ் மற்றும் மானூர் நீர் பாசன சங்கத்தினர் ஆகியோருக்கு பாராட்டுகளையும், விருதுகளையும் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற நோக்கத்தோடு தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. தாமிரபரணி நீரை தூய்மையான குடிநீராக மற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நதி தூய்மைப்படுத்தும் பணிகள் தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாக்கடை நீர் நதியில் கலப்பதை தடுத்து வருகிறோம்.
நெல்லை மாவட்டத்தில் நம்ம ஊர் திருவிழா எனும் மாபெரும் கலை திருவிழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழாவில் தாமிரபரணி நதி நீர் தூய்மை குறித்தும், தாமிரபரணியின் கரையோர பகுதிகளில் தூய்மை குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், நம் தாமிரபரணி நிர்வாகிகள் நல்லபெருமாள், முத்துகிருஷ்ணன், ராம்குமார், அமரவேல் பாபு, திருமலைக்குமார், நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழகம் முதல்வர் செண்பகராமமூர்த்தி, பேராசிரியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story