தனியார் கல்லூரிக்குள் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளை


தனியார் கல்லூரிக்குள் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 10 May 2022 10:00 PM IST (Updated: 10 May 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் தனியார் கல்லூரியில் கதவை உடைத்து ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழித்துறை:
மார்த்தாண்டத்தில் தனியார் கல்லூரியில் கதவை உடைத்து ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். 
தனியார் கல்லூரி
மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதிைய சேர்ந்தவர் தோமஸ் ராஜ் (வயது 49). இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞானதீபம் என்ற பெயரில் சமுதாய கல்லூரி நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகளுக்கு விரைவில் அரசு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு கட்டண தொகையை வசூல் செய்து வங்கியில் செலுத்துவதற்காக முதல் மாடியில் உள்ள அலுவலக பீரோவில் வைத்திருந்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல கல்லூரியை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் ஊழியர்கள் வந்தபோது, வாசலில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  
பணம் கொள்ளை
இதுபற்றி தோமஸ்ராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கல்லூரியின் முதல் மாடியில் உள்ள அலுவலக அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் மாயமாகி இருந்தது. மேலும், கல்லூரியின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 
இரவில் மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
கேமராவில் பதிவான உருவம்
இதுகுறித்து தோமஸ்ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.  
மேலும், கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பதிவுகளை கைப்பற்றினர். இந்த கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
தனிப்படை அமைப்பு
இதற்கிடையே மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story