குற்றாலத்தில் குளு குளு காற்று வேகமாக வீசுகிறது-சீசன் முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு?
குற்றாலத்தில் குளு குளு காற்று வீசுவதால் சீசன் முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தென்காசி:
குற்றாலத்தில் குளு குளு காற்று வீசுவதால் சீசன் முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
குற்றாலம் சீசன்
ஏழைகளின் ஊட்டி, தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின் போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த அருவி தண்ணீருக்கு மூலிகை சக்தி இருப்பதாக வரலாறு கூறுகிறது.
எனவே அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக குற்றாலத்தில் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அருவிகளில் தற்போது தண்ணீர் மிகவும் குறைவாக விழுகிறது.
குளிர்ந்த காற்று வீசுகிறது
கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம், தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிந்த காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்தாலும் அதன் தாக்கம் இந்த பகுதியில் இல்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்து இந்த குளுமையான சூழலை அனுபவிக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி உள்ளது. அதுபோன்று இந்த ஆண்டும் சீசன் முன்கூட்டியே தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அருவிகளில் குளிக்க முடியாமல் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் குளித்துச் செல்வார்கள்.
Related Tags :
Next Story