அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்
வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வலங்கைமான்;
வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அடுத்த சார நத்தம் ஊராட்சி பகுதியில் வேடம்பூர், சாரநத்தம், கொக்கலாடி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பெரும்பாலும் ஏழை விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக ராஜாராமன் துணைத்தலைவராக ஈஸ்வரன் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.
நேற்று வேடம்பூர்- ஆலங்குடி சாலையில் இப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் விரைவில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர்.
கலைந்து சென்றனர்
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆனந்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சம்பவ இடத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story