விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகை- பணம் திருட்டு மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி
விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டுசாலை முத்துலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா மனைவி பர்வீன்பேகம் (வயது 46). இவர் கடந்த 6-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஈரோட்டில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு கோலியனூர் திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பர்வீன்பேகம், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி
இதேபோல் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட விராட்டிக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டிலும், நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரி சாலை வீட்டுவசதி குடியிருப்பில் ஒரு வீட்டிலும் நள்ளிரவில் கதவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.
ஆனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பொதுமக்கள் எழுந்து மின்விளக்கை போட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனால் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கொள்ளை போகாமல் தப்பியது.
Related Tags :
Next Story