தனியார் கல்லூரி கட்டிடத்தில் ஏறி 9 மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
சங்கரன்கோவில் அருகே தங்கள் மீது போலீசார் போட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி தனியார் கல்லூரி கட்டிடத்தில் ஏறி 9 மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனவடலிசத்திரம்:
சங்கரன்கோவில் அருகே தங்கள் மீது போலீசார் போட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி தனியார் கல்லூரி கட்டிடத்தில் ஏறி 9 மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, கல்லூரி முதல்வருக்கும், மாணவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் போலீசார், 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அந்த 12 மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
சமாதான கூட்டம்
இதையடுத்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருக செல்வி தலைமையில் கடந்த பிப்ரவரி 25-ந் தேதி சமாதான கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தொடர்ந்து கல்வி பயிலவும் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அந்த 12 மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 9 பேர் கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் கல்லூரி கட்டிடத்தின் மாடியில் ஏறி திடீரென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதை அறிந்த சக மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் குவிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
கட்டிடத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் தங்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி கட்டிடத்தில் இருந்து கீழே இறங்க மறுத்துவிட்டனர்.
கீழே இறங்கினர்
தொடர்ந்து நெல்லை மண்டல கல்லூரிகளின் துணை இயக்குனர் பாஸ்கரன், சங்கரன்கோவில் தாசில்தார் பாபு ஆகியோரும் வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பேராசிரியர்களுடன் சமாதான கூட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் பத்திரமாக கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கி வந்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவர்களும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
சங்கரன்கோவில் அருகே கல்லூரி கட்டிடத்தில் ஏறி 9 மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story