கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணி இடை நீக்கம் மாணவர்களின் புகாரை தொடர்ந்து கலெக்டர் நடவடிக்கை


கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணி இடை நீக்கம் மாணவர்களின் புகாரை தொடர்ந்து கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 May 2022 10:52 PM IST (Updated: 10 May 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் புகாரை தொடர்ந்து கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியைைய பணிஇடை நீக்கம் செய்து கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தென்பேர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் மோகனை நேரில் சந்தித்து, 

தங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், பலமுறை பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை, இதனால் மேல்படிப்பை படிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்று புகார் தெரிவித்தனர்.


அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியை உடனடியாக ஆய்வு செய்து மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததன் காரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். 

அதன்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, தென்பேர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பணிஇடை நீக்கம்

அப்போது பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீரங்கநாச்சியார், மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை பெற்றுத்தர மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவ- மாணவிகளின் கற்றல், கற்பித்தல் பணியை கண்காணிக்க தவறியதும்,

 ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்ததும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி வளாகம், கழிவறையை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக அப்பணியை செயல்படுத்தாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீரங்கநாச்சியாரை உடனடியாக பணிஇடை  நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டார். 

அதோடு இப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சுந்தரமவுலி என்பவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஏதேனும் பெற்று வழங்கப்படவில்லை எனில் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மாணவ- மாணவிகள் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story