புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 20 ஆயிரத்து 138 பேர் எழுதினர் 661 பேர் தேர்வு எழுத வரவில்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 20 ஆயிரத்து 138 பேர் எழுதினர். 661 பேர் தேர்வு எழுதவரவில்லை.
புதுக்கோட்டை:
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தமிழ்பாடத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வறைக்கு வந்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி அளவில் முடிவடைந்தது.
மாவட்டத்தில் 10 ஆயிரத்து 116 மாணவர்களில் 9 ஆயிரத்து 771 பேரும், 10 ஆயிரத்து 683 மாணவிகளில் 10 ஆயிரத்து 367 பேரும் என மொத்தம் 20 ஆயிரத்து 799 மாணவ-மாணவிகளில் 20 ஆயிரத்து 138 பேர் தேர்வு எழுதினர். 661 பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழ் பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
மாவட்டத்தில் பிளஸ்-1 வினாத்தாள்கள் பாதுகாப்பான மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தடுக்க 200 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தேர்வு மையங்களை பார்வையிட்டார்.
மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது தேர்வு எழுத வந்திருந்த மாணவர்களிடம் படித்தவற்றை மனப்பாடம் செய்வதோடு நிறுத்திவிடாமல் அடிக்கடி நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். வினாத்தாள்களை வாங்கியவுடன் முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பின்பு அடுத்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அதே போல் தேர்வினை கண்டு பயப்படாமல் தைரியமாக எழுத வேண்டும் என்றார். பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story