50 வயது பெண்ணை திருமணம் செய்ததால் வாலிபரை கட்டிப்போட்டு கொடூர தாக்குதல்
கொடைக்கானலில் 50 வயது பெண்ணை திருமணம் செய்ததால், வாலிபரை கட்டிப்போட்டு அந்த பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
50 வயது பெண்ணுடன் திருமணம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான கூக்கால் கிராமத்துக்கு வந்தார். அங்கு நிலம் வாங்கி, கட்டிடம் கட்டி தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
அந்த விடுதியில், கூக்கால் கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த 50 வயது பெண் பணிபுரிந்தார். அந்த வாலிபருக்கும், பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து, கணவன்-மனைவியாக கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
50 வயது பெண்ணை, 32 வயது வாலிபர் மணம் முடித்ததால் அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும் அந்த பெண்ணின் மகளுக்கு திருமணம் ஆகி பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார்.
வாலிபருடன் தகராறு
மகள் வயதுடைய வாலிபருடன் சேர்ந்து வாழ்வதால், தங்களுக்கு அவமானமாக இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் கருதினர். இதனையடுத்து 2 பேரையும், பெண்ணின் உறவினர்கள் பலமுறை கண்டித்தனர். இருப்பினும் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் ஊர் திருவிழா நடைபெற்றது.
அப்போது, கூக்கால் தோட்டத்து பகுதி வழியாக கடந்த 6-ந்தேதி அந்த வாலிபர் நடந்து வந்தார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த பெண்ணின் உறவினர்கள் 4 பேர், வாலிபருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கட்டிப்போட்டு தாக்குதல்
பின்னர் தாங்கள் வைத்திருந்த கயிற்றால் வாலிபரின் கை, கால்களை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கினர். மேலும் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் கற்களால் கொடூரமாக தாக்கினர்.
ஒரு கட்டத்தில், 4 பேரின் தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் வாலிபர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தாக்குதலை நிறுத்துமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து 4 பேரையும் விரட்டி விட்டு வாலிபரை மீட்டனர். ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ வைரல்-பரபரப்பு
இதற்கிடையே அந்த வாலிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, கூக்கால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்தார். அதனை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டார். அந்த வீடியோ, தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், அந்த பெண்ணின் உறவினரான பூவேந்திரன், அவருடைய நண்பர்கள் வரதராஜன், கார்த்திக், சின்னத்தம்பி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் மலைக்கிராமத்தில் நெஞ்சை பதை, பதைக்க செய்யும் வகையில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story