திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்


திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2022 11:07 PM IST (Updated: 10 May 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கு மின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி 52 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினை அவர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நல வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கான அடையாள அட்டை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி திருநங்கைகள் இணைய வழி மூலமாக அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகள் என்ற கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டு, அவர்களது சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86 திருநங்கைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 72 பேருக்கு இணைய வழி அல்லாத சாதாரண அடையாள அட்டை கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கான சேவைகளை எளிதாக பெறுவதற்காக திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மின் அடையாள அட்டை முதல்கட்டமாக 52 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story