கூரை வீட்டின் மீது மரம் விழுந்து சிறுமி பலி
நாட்டறம்பள்ளி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பலியானாள்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பலியானாள்.
கூலித்தொழிலாளி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபாலு (வயது 35). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு தேவிகா என்கிற தீப ஜோதி (6) என்ற மகளும், கவின் (2) என்ற மகனும் உண்டு. தேவிகா என்கிற தீப ஜோதி அப்பகுதியில் உள்ள பழைய பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கிருஷ்ணபாலு குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட பிறகு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டின் மீது மரம் விழுந்தது
நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையில் கிருஷ்ணபாலுவின் வீட்டின் பின்புறம் இருந்த வேப்ப மரம் முறிந்து அவருடைய கூரை வீட்டின் மீது விழுந்தது.
இதில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணபாலு, மனைவி மற்றும் குழந்தைகள் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியே வர முயன்றனர். சத்யா தனது மகன் கவினை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்து விட்டார்.
சிறுமி பலி
கிருஷ்ணபாலு வீட்டின் மீது விழுந்த வேப்ப மரக்கிளையின் இடுக்கில் மாட்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சிறுமி தேவிகா என்கிற தீப ஜோதி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே தூங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சரவணன் மற்றும் பச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதன் பிறகு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story