வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறையினர் ஆய்வு


வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2022 5:50 PM GMT (Updated: 2022-05-10T23:20:02+05:30)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

வேதாரண்யம்:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
வெள்ளை ஈ தாக்குதல்
வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், தாமரைப்புலம், தலைஞாயிறு, வாய்மேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தென்னை மரங்களில் அதிக அளவு வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. இந்த நோய்  தாக்குதல் தென்னை, வாழை, மா, முந்திரி, கொய்யா, சீதாப்பழம் ஆகியவற்றில் காணப்பட்டது.
 பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் வெளிவந்தது. 
வேளாண்மை துறையினர் ஆய்வு
இதன் எதிரொலியாக வேளாண்மை துறையினர் நாலுவேதபதியில் உள்ள தென்னந்தோப்புகளில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். 
அப்போது வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா  கூறியதாவது:-
தென்னை மரங்களில் நான்கடி உயரத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து அதில் வெள்ளை கிரீஸ் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி வைக்கலாம்.இதில் வெள்ளை ஈக்கள் ஒட்டிக்கொள்ளும். மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிர செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
ஆலோசனை
 பூச்சிதாக்கப்பட்ட தென்னை மரங்களின் மேல் தெளிபான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம். தென்னை விவசாயிகள் இந்த ஆலோசனையை பின்பற்றி வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின் போது வேளாண்மை அலுவலர்கள் நவீன், யோகேஷ், உதவி வேளாண்மை அலுவலர் கனிமொழி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story