ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஓசூர்:
ஓசூர் ராம் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு மாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே, பக்தர்கள் குடும்பத்துடன், மாவிளக்கு எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். மேலும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கன்னம், முதுகில் அலகு குத்திக்கொண்டும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறும், ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் பூங்கரக ஊர்வலமும் நடைபெற்றது. விழாவையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பக்தர்கள், ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள தேசம்மா கோவில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகேயுள்ள கங்கம்மா கோவில், மண் மாரியம்மா, ஏடுகிரியம்மா ஆகிய கோவில்களுக்கும் சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் மேற்பார்வையில் நகர் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story