குமாரபாளையம் அருகே கார் மீது லாரி மோதியதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள்கள் படுகாயம்
குமாரபாளையம் அருகே கார் மீது லாரி மோதியதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள்கள் படுகாயம் அடைந்தனர்.
குமாரபாளையம்:
பெண் இன்ஸ்பெக்டர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேதாஜி நகர் ஆலாங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மனைவி தேவி. இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெய ரித்திகா (வயது 20) சென்னையில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டும், இளைய மகள் சஷ்டிகா (12) குமாரபாளையத்தில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் தேவி போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டார். அவரை பார்ப்பதற்காக ஜெய ரித்திகா, சஷ்டிகா காரில் சங்ககிரி சென்றனர். காரை ஜெய ரித்திகா ஓட்டி சென்றார். அவர்கள் தேவியை பார்த்து, பேசிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
லாரி மோதியது
மாலை 4.30 மணிக்கு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் சென்றபோது, கார் திடீரென ஜெய ரித்திகாவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலை மத்தியில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி எதிர் பக்கமாக சென்றது. அப்போது குமாரபாளையத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற டிப்பர் லாரி கார் மீது மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. மேலும் காரில் இருந்த ஜெய ரித்திகா, சஷ்டிகா படுகாயம் அடைந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி வலியால் அலறி துடித்தனர். இந்த விபத்தால் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அக்காள், தங்கையை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குமாரபாளையம் அருகே விபத்தில் சிக்கி பெண் இன்ஸ்பெக்டரின் மகள்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story